12 கோடி வேலைகளை பறித்த பாஜ இந்தியா கூட்டணி ஆட்சியில் வேலை வாய்ப்பு புரட்சி ஏற்படும்: காங்கிரஸ் உறுதி

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு 12 கோடிக்கும் அதிகமான வேலைகளை பறித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் நூற்றுக்கணக்கான பேரணிகளின்போது, பாஜவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதை நீங்கள் யாரும் அவரிடம் கேட்டீர்களா? 10 ஆண்டுகளில் 20 கோடி வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில் 12 கோடிக்கும் அதிகமான வேலைகள் பறிக்கப்பட்டு விட்டன” என்று குற்றம்சாட்டி உள்ளார். மேலும், “நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்னை வேலையில்லா திண்டாட்டம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அரசு ஆள் சேர்ப்பு தேர்வுகளின் மூலம் வேலை கிடைப்பதை எளிதாக்க யுவநீதியின்கீழ் வேலை வாய்ப்பு புரட்சி ஏற்படுத்துவோம்.

30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பட்டப் படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊதியத்துடன் கவுரமான வேலை வாய்ப்பு கிடைக்கும். குறிப்பிட்ட காலத்துக்கு நீடிக்கும் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும். இளைஞர்களின் கனவை சிதைத்த அக்னி வீரர் திட்டம் ரத்து செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மார்ச் 15 2024 வரையிலான கல்வி கடன் ரத்து செய்யப்படும். 21 வயதுக்குட்பட்ட திறமையான, வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 விளையாட்டு உதவித்தொகை வழங்கப்படும். அரசு தேர்வுகள், பணிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும். கொரோனா தொற்று காலத்தில் 2020 ஏப்ரல் 1 முதல் 2021 ஜூன் 30 வரை அரசு தேர்வுகளில் பங்கேற்க முடியாதவர்களுக்கு இந்தியா கூட்டணி அரசு ஒருமுறை நிவாரணம் வழங்கும்” என்று உறுதி அளித்துள்ளார்.

The post 12 கோடி வேலைகளை பறித்த பாஜ இந்தியா கூட்டணி ஆட்சியில் வேலை வாய்ப்பு புரட்சி ஏற்படும்: காங்கிரஸ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: