வணிகர்கள் அவதிப்படுவதால் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: வணிகர்கள் அவதிப்படுவதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை. எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வணிகர்கள் அவதிப்படுவதால் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: