பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான் கோதுமை மாவுக்காக ஏங்குகிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பயங்கரவாதம் சப்ளை செய்த நாடு இப்போது கோதுமை மாவுக்காக ஏங்குகிறது என்று பாகிஸ்தானை குறிவைத்து பிரதமர் மோடி தாக்கினார். மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்தியபிரதேசம், உபியில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிக ஆயுதங்களை வாங்கிய இந்தியா, தற்போது உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது. உலகில் பல நாடுகளின் நிலை மோசமடைந்துள்ளது. பல திவாலாகி வருகின்றன. பயங்கரவாதம் சப்ளையராக இருந்த நமது அண்டை நாடுகளில் ஒன்று கூட, இப்போது கோதுமை மாவு சப்ளைக்காக போராடி வருகிறது.

தேசம் முதலில் என்ற கொள்கையுடன் எனது அரசு செயல்படுகிறது. எந்தத் தரப்பில் இருந்து வரும் எந்த அழுத்தத்திற்கும் எனது அரசு அடிபணியாது. உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் போது , எந்தத் தேவையையும் சமாளிக்கும் திறன் கொண்ட அரசு நமது நாட்டிற்கு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

* நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் டேனிஷ் அலி வரக்கூடாது
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதி எம்பியான டேனிஷ் அலி தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு நேற்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி, டேனிஷ் அலியை தாக்கி பேசினார். அவர் கூறுகையில்,’டேனிஷ் அலி பாரத் மாதா கி ஜெய் கோஷம் எழுப்புவதில் எனக்கு ஆட்சேபனை இருக்கிறது என்கிறார். பாரத் மாதா கி ஜெய்யை ஏற்க முடியாத ஒருவர் இந்திய நாடாளுமன்றத்தில் அழகாக இருப்பாரா? அப்படிப்பட்டவரை இந்திய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டுமா?’ என்று விமர்சனம் செய்தார்.

The post பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான் கோதுமை மாவுக்காக ஏங்குகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: