நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!

சென்னை : தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர். தமிழ்நாடு முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 181. 39 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள். நேற்று வரை ரூ.173 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிவிஜில் செயலி மூலம் நேற்று வரை 4861 புகார்கள் வந்துள்ளன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்களை தயாராக வைத்துள்ளோம். 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு லட்சம் மாநில காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மாநில காவல்துறையினர், ரிசர்வ் போலீசார் என மொத்தம் 1.3 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். 85 வயதிற்கும் மேற்பட்ட 67ஆயிரம் பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். 65% வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரிசெய்யவும், அதனை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெப் காஸ்டிங் மூலும் கண்காணிப்பு நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பிவைக்கப்படும்.வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. சென்னையில் கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்க வசதியாக பெண்கள் நிர்வகிக்கும் 16 ‘பிங்க் பூத்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: