கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி ஏற்பட்டது. காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு 2 ஓட்டுகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் இருப்பதாக புகார் எழுந்தது. 9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும்போது பா.ஜ.க. தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது. ஒரு முறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு மட்டும் 2 ஒப்புகைச் சீட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு இரண்டு வாக்குகள் பதிவாவது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேரளா வாக்குப்பதிவு குறித்து முறையீடு செய்ததில்,

தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஒப்புகைச் சீட்டு 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேரளா வாக்குப்பதிவு குறித்து குறித்து முறையீடு செய்தார். பா.ஜ.க.வுக்கு 2 முறை ஓட்டு பதிவாவது குறித்து பிரசாந்த் பூஷண் நீதிபதிகளிடம் முறையிட்டார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறியாளர்கள் செய்ய வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்தார். வாக்கு இயந்திரங்களை கையாளும் பொறியாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்படாதவர்கள் என்பதால் தில்லு முல்லு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெறும் என்பது வெறும் அச்சம் மட்டுமே என்று தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தில்லுமுல்லு நடக்குமோ என்ற அச்சம் என்பது கூட இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தேர்தல் நடைமுறையில் முறைகேடு நடக்கும் என்ற சந்தேகம் துளியும் எழாத அளவுக்கு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறை என்பது புனிதமானது என்று தெரிவித்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும், உரிய விசாரணை நடத்தவும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: