நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தோம்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

திண்டுக்கல்: நான் முதல்வர் திட்டத்தால் பயனடைந்தோம் என்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தெரிவித்து உள்ளனர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு 1,143 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே 28ம் தேதி நடந்தது. ஜூனில் முதல்நிலை தேர்வு வெளியிடப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஜன.2 முதல் ஏப்.10 வரை நடந்தது. நேர்காணல் முடிந்ததையடுத்து, இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது. அகில இந்திய அளவில் 1,016 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுபதர்ஷினி, ஆஷிக் உசேன், ஓவியா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த சுபதர்ஷினி கூறுகையில், ‘‘அகில இந்திய அளவில் 83ம் இடத்தை பிடித்தேன். 7வது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பல் மருத்துவராக ஒரு வருடம் பணி புரிந்தேன். சிறு வயது முதலே நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த 2017ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த ஆஷிக் உசேன் கூறுகையில், ‘‘அகில இந்திய அளவில் 842வது இடம் பிடித்தேன். நான் பிஇ சிவில் மெக்கானிக்கல் படித்தேன். சென்னையில் உள்ள கோச்சிங் சென்டரில் படித்தேன். ஆனால் கொரோனாவால் அது தொடர முடியவில்லை, இதையடுத்து நான் வீட்டிலேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஆன்லைன் மூலமாக நிறைய கற்று கொண்டே நான், 3வது முயற்சியிலேயே வெற்றி பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

பழநி அடிவாரம் மதுராபுரத்தை சேர்ந்த ஓவியா கூறுகையில், ‘‘பிஎஸ்சி விவசாயம் படித்த நான் 5 ஆண்டாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தேன். 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று தோல்வி அடைந்தேன். 4வது முறையாக பங்கேற்று 96வது ரேங்க் பெற்று வெற்றியடைந்தேன். தொடர் முயற்சியால் வெற்றி சாத்தியமாகியுள்ளது’’ என்றார்.

வெற்றி பெற்றவர்கள் மூவரும் கூறுகையில், ‘‘இத்தேர்விற்கு தயாராக தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு ₹25,000 நிதி வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்றனர்.

The post நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தோம்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: