தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறையே கிடையாது உச்சி வெயிலை விட கொடுமையானது பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கவுண்டமபாளைம், சிவானந்தா காலனி, காரணம்பேட்டை ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த திமுகவினர், பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு என்பது மோடிக்கு வைக்கும் வேட்டு. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன், நமது கூட்டணிக்கு வாக்களித்து என்னை முதல்வராக தேர்வு செய்த மக்களுக்கும், வாக்காளிக்காத மக்கள் பொறாமைப்படும் அளவிற்கு பணியாற்றுவேன் என கூறினார். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்று கலைஞர் கூறுவார். அந்த வழியில் வந்த மு.க.ஸ்டாலின் சொல்வதை நிச்சயம் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பாஜவை விரட்டியடித்து இந்தியா கூட்டணிதான் ஆட்சியை அமைக்க உள்ளது. அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு மற்றும் கோவை இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மானியத்தோடு காஸ் சிலிண்டர் விலை ரூ.500க்கு வழங்கப்படும் என தலைவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.65க்கு கொடுக்கப்படும்.

பாதம் தாங்கி பழனிசாமி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். 4 ஆண்டுகளாக பாஜ கூட்டணியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல மாநில உரிமைகளை பறிக்க காரணமாக இருந்தவர் பழனிசாமி. மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமை போன்ற உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் 7 ஆண்டில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர். அந்த பாஜ நமக்கு தேவையா?. கடும் நிதி நெருக்கடியிலும் அமல்படுத்தப்பட்டதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இன்னும் இது போல திட்டங்கள் தொடர வேண்டுமெனில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது, மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகின்றார். 10 ஆண்டுகளாக வராத மோடி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வருகிறார். ஏமாந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு சுய மரியாதை வேண்டும். நமக்கான உரிமைகள் வேண்டும். மொழி உரிமை வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களை பாஜவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறையே கிடையாது. இந்த உச்சி வெயிலை விட கொடுமையானது உச்சத்தில் உள்ள பாஜ அரசு. அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் ஏப்ரல் 19. ஜிஎஸ்டி என்பது வரி கிடையாது அது ஒரு வழிப்பறி கொள்ளை. திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில்களையும், வணிகர்களையும் சாகடித்தது ஜிஎஸ்டி வரிதான். பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என கேள்வி கேட்ட பெண்ணுக்கு பதில் சொல்ல வக்கில்லாத பாஜவினர் அந்த பெண்ணின் கடைக்கே சென்று அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பிரதமர் மோடி நாம் கொடுக்கும் வரியில் 29 பைசா மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி கொடுக்கிறார். அதை வைத்து முதல்வர் இவ்வளவு சேவை செய்கிறார். இவ்வாறு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். எனவே, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறையே கிடையாது உச்சி வெயிலை விட கொடுமையானது பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: