சென்ைனயில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 3ம் கட்ட பயிற்சி வகுப்பு:  கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

சென்னை: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 19ம்தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24ம் தேதி அன்றும், விடுபட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 30ம்தேதி அன்றும், 2ம் கட்டப் பயிற்சி வகுப்பு கடந்த 7ம்தேதி அன்றும், 2ம் கட்ட மறுபயிற்சி வகுப்பு கடந்த 13ம் தேதி அன்றும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் 3ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (18ம்தேதி) காலை 9 மணிக்கு 16 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆணைகள் வழங்கப்படும். மேலும், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி மையம் குறித்த விவரங்கள் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே, நாடளுமன்ற பொதுத்தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் நாளை நடைபெறும் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு தங்களுக்குண்டான வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய ஆணையினை பெற்றுக் கொண்டு தேர்தல் பணியினை செவ்வனே செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டிய தடுப்புகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் காவல்துறையின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், சட்டமன்றத் தொகுதி வாரியாக அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இணையதளம் வழியே வழங்கப்படவேண்டிய அனுமதி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்படும்.

வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்ட வேண்டிய ஏற்பாடு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்படும்.

இதேபோல் வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் கலால் துறை உள்ளிட்ட தேர்தல் பணி தொடர்புடைய பல்வேறு குழுக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இப்பணிகள் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். நாளை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்ைனயில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 3ம் கட்ட பயிற்சி வகுப்பு:  கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: