வீட்டில் பதுக்கிய ரூ.12 லட்சம் மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: வாலிபர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒரு வாலிபரை கைது செய்தனர். அமைந்தகரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கொக்கைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருளை விற்பனை செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 3 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேரை, கடந்த சில நாட்களுக்கு முன், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அமைந்தகரை பகுதியில் மீண்டும் கொக்கைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அண்ணாநகர் துணை ஆணையர் சீனிவாசன் தனிப்படை அமைத்து, போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமைந்தகரை திரு.வி.க நகர் பார்க் அருகே கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (25) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 1 கிராம் கோக்கேன் ₹7 ஆயிரம் வீதம் வாங்கி வந்து, சென்னையில் விஐபி குடும்பங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் ₹10 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லோகேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹12 லட்சம் மதிப்புள்ள 120 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லோகேஷை கைது செய்தனர். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டில் பதுக்கிய ரூ.12 லட்சம் மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: