வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8 வாரங்களுக்குள் விசாரணையை சிபிசிஐடி போலீஸ் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக ஐகோர்ட் அமைத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 292 சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. சிபிசிஐடி, அரசியல் மற்றும் சாதி ரீதியான கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளது. மொத்தம் 183 மொபைல் போன்களின் அழைப்பு விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. விசாரணை நேர்மையாகவும் நியாயமாக நடைபெறுகிறது என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பின் இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்து அதற்குள் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

The post வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8 வாரங்களுக்குள் விசாரணையை சிபிசிஐடி போலீஸ் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: