தேர்தல் பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணமில்லாத ரூ.13.52 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூர்: எண்ணூர் அருகே எர்ணாவூர் குப்பம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில், அசாம் பாஷா என்பவரிடம் கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணம் இல்லாததால், காரில் இருந்த 10 லட்சத்து 74 ஆயிரத்து 560 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ராமலிங்கா கோயில் அருகே நேற்று முன்தினம் மாலை பறக்கும்படை அதிகாரி பாலமுருகன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருமழிசை பகுதியை சேர்ந்த பார்த்திபன் (44) என்பவர், லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்கான பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை – அரும்பாக்கம் நெடுஞ்சாலை திருவீதியம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி அரவிந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், சூளைமேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், கடைக்கு காய்காறிகள் வாங்க பணம் கொண்டு சென்றதாக கூறினார். ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சின்னாண்டி மடம் சந்திப்பு அருகே நேற்றுமுன்தினம் மாலை பறக்கும் படை அதிகாரி இலன்குமரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.78,500 இருந்தது. விசாரணையில், கொடுங்கையூர் பெரியசேக்காடு பகுதியைச் சேர்ந்த ராம்தேவ் (29) என்பவர், உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனால், அந்த பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post தேர்தல் பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணமில்லாத ரூ.13.52 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: