ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

சென்னை: ஆவடி அருகே பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளரை கட்டிப் போட்டு, துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பகல் 12 மணியளவில் பிரகாஷ் தனது நகைக்கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், வாடிக்கையாளர்கள் போல் அந்த நகைக் கடைக்குள் சென்றுள்ளனர். அங்கு, நகை வாங்குவது போல் நடித்த அவர்கள், திடீரென 2 கை துப்பாக்கிகளை எடுத்தனர்.

பின்னர் சத்தம் போட்டால் சுட்டு விடுவோம் என பிரகாஷை மிரட்டி, கடையின் ஷட்டரை மூடினர். இதை தொடர்ந்து, சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்த அந்த கும்பல், பிரகாஷை சரமாரியாக தாக்கி, அவரது கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். மேலும், அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். பின்னர், கடையில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து, நகைக்கடை ஷட்டரை மூடிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

பிரகாஷின் அடகு கடையில் அடமானமாக வைத்த 140 பேரின் தங்க நகைகளும் இதில் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் தலைமையில், 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில கும்பல் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்கள் வந்த கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவியில் பதிவாகியுள்ள வீடியோவை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக பறக்கும் படையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை கும்பல் தரை மார்க்கமாக தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று கூறும் தனிப்படை போலீசார், ரயில், விமான போக்குவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: