7 எருமை மாடுகள் உயிரிழப்பில் திருப்பம்: மின்வேலி வைத்து கொன்ற 4 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் புறவழிச்சாலையில் 7 எருமை மாடுகள் இறந்துகிடந்த வழக்கில், மின்வேலி வைத்து கொன்றதாக 4 பேரை, போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் புறவழிச்சாலையில் கடந்த 11ம்தேதி 7 எருமை மாடுகள் இறந்து கிடந்தன. இந்த மாடுகள் நெம்மேலி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவை வாகனம் மோதி இறந்ததா அல்லது வயலில் மேய்ந்ததால் விஷம் வைத்து கொல்லப்பட்டு சாலையில் வீசப்பட்டதா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கால்நடை மருத்துவர் தாரணி தலைமையில், மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தினர். இதில், மாடுகள் அனைத்தும் மின்சாரம் தாக்கி இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்போரூர் போலீசார் ஒவ்வொரு விவசாய நிலங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். கண்ணகப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேலு (63), சீதாபதி (30), ஜீவா (27), விஜயன் (40) ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், தங்களது நிலத்தில் வேர்க்கடலை பயிர் போட்டிருந்ததாகவும்,

பன்றித்தொல்லை காரணமாக மின்கம்பி வைத்திருந்ததாகவும், அதில் மாடுகள் சிக்கி இறந்துவிட்டதாகவும், வெளியே தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் அவற்றை டிராக்டரில் கொண்டு வந்து சாலையில் வீசிச்சென்றதாகவும் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் மின்சாரம் பாய்ச்ச பயன்படுத்தப்பட்ட கம்பி போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட 4 பேரை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 7 எருமை மாடுகள் உயிரிழப்பில் திருப்பம்: மின்வேலி வைத்து கொன்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: