வேங்கைவயல் விவகாரம்: தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்த நிலையில் முதல் அரசியல் கட்சியாக வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று 15 மாதங்களான நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்று கூறி நேற்று வேங்கைவயல் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பதாகைகள் வைத்தனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்கு மட்டும் எந்தவித அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரைக்கு செல்லவில்லை. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராஜேஷ் இன்று வேங்கைவயல் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார். ஆனால் வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதி மக்கள் பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு வரவில்லை.

மேலும், வேட்பாளர் ராஜேஷ் பிரச்சாரத்தில்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேங்கைவயல் பிரச்சைக்கு தீர்வு காண்பேன் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வேன் என்றும் வாக்குறுதி கொடுத்தார். மேலும், தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே இதற்கு தீர்வாகாது என்று கூறி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். முதன் முறையாக வேங்கைவயல் கிராமத்திற்குள் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரை ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வேங்கைவயல் விவகாரம்: தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்த நிலையில் முதல் அரசியல் கட்சியாக வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: