லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது

மீனம்பாக்கம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனிலிருந்து 289 பயணிகளுடன் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்தது. அதில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, 15 வயது மகளுடன் வந்தனர். விமானம் சென்னையில் தரையிறங்கி, தம்பதியர் விமானத்தை விட்டு இறங்கி அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, சென்னையில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு சென்று விட்டனர். சிறுமி தனி அறையில் அழுதபடி சோகமாக இருந்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர், மகளிடம் விசாரித்தனர்.

அப்போது சிறுமி அழுது கொண்டே, விமானத்தில் பின் இருக்கையில் இருந்த ஆண் பயணி, தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாகவும், அப்போதே அதை வெளியில் சொன்னால் பயணிகளுக்கு மத்தியில் அவமானம் ஏற்படும் என்பதால், சகித்துக் கொண்டு சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக பயணித்ததாகவும், அந்த ஆண் பயணி அதை சாதகமாக பயன்படுத்தி தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக தம்பதியர் தங்களது மகளை அழைத்துக் கொண்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, விமான நிலைய மேலாளரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர், மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய போலீசுக்கு புகாரை அனுப்பியதோடு, அந்த தம்பதியையும் போலீஸ் நிலையம் சென்று புகார் கூறும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில் தம்பதியர், விமான நிலைய காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விமானத்தில் சிறுமியின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜாவாஸ் ஜார்ஜ் (31) என்று தெரிய வந்தது. மேலும் அவர் அயர்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில், பொறியாளராக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை அண்ணாநகர் சென்று, ஜாவாஸ் ஜார்ஜை கைது செய்தனர்.

The post லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: