பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ஆன்லைனில் ₹1 லட்சம் அபேஸ் வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை இன்ஸ்டாகிராம் விளம்பரம் பார்த்து ஆடை ஆர்டர் செய்த

வேலூர், ஏப்.16: குறைந்த விலைக்கு ஆடைகள் விற்பனைக்கு உள்ளதாக இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை பார்த்து ஆடை ஆர்டர் செய்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ஆன்லைனில் ₹1 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி, தண்டலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய ஐடி நிறுவன பெண் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலைக்கு ஆடை விற்பனைக்குள்ளதாக இருந்த விளம்பரத்தை பார்த்து சில நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த ஆடைக்கு பதிலாக வேறொரு ஆடை இருந்ததால், அந்த பார்சலை திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.

இதையடுத்து வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருந்த இ-மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு கஸ்டமர் மைய எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பதில் அனுப்பி உள்ளனர். மேலும் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் லிங்கில் ஆர்டர் செய்த ஆடைக்கான தொகையை மீண்டும் திருப்பி அனுப்பிவிடுவதாக மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண் வாட்ஸ் அப்பில் மர்மநபர் தெரிவித்த பல்வேறு வழிக்காட்டுதல்களை பின்பற்றி விவரங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹99 ஆயிரத்து 999ஐ ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து சைபர் கிரைம் புகார் அளிப்பு இணைதளம் www.cybercrime.gov.in வாயிலாக புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ சதீஷ்குமார் ஆகியோர் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, பகுதி நேர வேலை சம்மந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மேலும் நமது செல்போனில் பெயர் மற்றும் முகவரி தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் பைல் என்ற பெயரில் வரும் எவ்வித பைலையும் கிளிக் செய்தவுடன் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் இழக்க நேரிடும். எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

The post பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ஆன்லைனில் ₹1 லட்சம் அபேஸ் வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை இன்ஸ்டாகிராம் விளம்பரம் பார்த்து ஆடை ஆர்டர் செய்த appeared first on Dinakaran.

Related Stories: