தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக ஒன்றிய பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம், பேச்சு, கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகிய அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதால் அத்திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாரா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் திட்டம் எந்தவொரு தனி மனிதனின் அடிப்படை உரிமையையும் தனது எல்லைக்குள் கட்டுப்படுத்தவில்லை. எனவே இது சட்டரீதியான பிரச்னையே அல்ல. அதோடு, மனுதாரர் இந்த திட்டத்தால் நேரடியாக எந்த சட்ட பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.

இந்த தீர்ப்பின் மூலம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கலாம். அதோடு இந்த திட்டத்தால் அரசியல் கருப்பு பணத்தை முற்றிலும் ஒழித்து விட முடியாது என்றாலும், நன்கொடையாளர்களின் ரகசியத்தன்மையை காப்பது உள்ளிட்ட சில வெளிப்படைத்தன்மைகளை கொண்டிருப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: