கல்வீச்சு தாக்குதலில் காயம்; மீண்டும் இன்று பிரச்சாரத்தை தொடங்கினர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திர: ஆந்திராவில் பேருந்து யாத்திரையின்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதில் ஜெகன்மோகனின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. தேர்தலை ஒட்டி வேட்பாளர்களை ஆதரித்து பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ஜெகன்மோகன். ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, பேருந்தில் பயணம் செய்தபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடப்பா மாவட்டம் இடுபுலுபாயாவில் இருந்து ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் வரை 21 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

விஜயவாடாவில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பிரசார பேருந்தில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து நேற்று ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார். என்.டி.ஆர். மாவட்டத்தின் கேசரபள்ளியில் இருந்து தனது பிரசார பேருந்தில் பிரசார பயணத்தை தொடங்கிய அவர், ஆட்கூர், வீரவள்ளி கிராஸ், அனுமன் சந்திப்பு மற்றும் பிற கிராமங்கள் வழியாக செல்கிறார். ஆந்திராவில் 175 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

 

The post கல்வீச்சு தாக்குதலில் காயம்; மீண்டும் இன்று பிரச்சாரத்தை தொடங்கினர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி! appeared first on Dinakaran.

Related Stories: