அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி

குடியாத்தம், ஏப்.15: குடியாத்தம் தனியார் விடுதியில் தங்கிய அதிமுக, பாஜவினரிடம் இருந்த ₹1.76 லட்சத்தை டிஎஸ்பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு கட்சிகள் சார்பில் பேச்சாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அதிமுக, பாஜ பிரமுகர்களின் நட்சத்திர பேச்சாளர்கள் தனித்தனியாக தங்கியுள்ளனர். இந்த விடுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் பதுக்கியிருப்பதாக வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், டவுன் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் விடுதியில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு அறையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவர் தங்கி இருந்தார். அந்த அறையை சோதனை செய்ததில் ₹1 லட்சத்து 11 ஆயிரம் இருந்தது. மேலும், பாஜ பிரசார நோட்டீஸ்கள், வாக்காளர் பட்டியலும் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அதிமுக தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது ₹65 ஆயிரத்து 500 இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் கைப்பற்றி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாசில்தார் சித்ராதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

The post அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: