தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜால வாக்குறுதிகள்; பழைய உத்தரவாதங்கள் என்னாச்சு..? பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘பாஜவின் தேர்தல் வாக்குறுதியில் வெறும் வார்த்தை ஜாலங்களே இடம் பெற்றுள்ளதாகவும், பழைய உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படாததற்கு பாஜ என்ன பதில் சொல்லப் போகிறது’ என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

பாஜ தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
பாஜவின் தேர்தல் அறிக்கைக்கு நியாயமாக ‘மன்னிப்பு அறிக்கை’ என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும். அவர்களின் 10 ஆண்டு கால ஆட்சியில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே மோடி கொடுத்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ன ஆனது? ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் இருந்த ரூ.15 லட்சம் என்ன ஆனது? பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதும் என்ன ஆனது? 100 புதிய ஸ்மார்ட் நகரங்களுக்கு என்ன ஆனது? 2020க்குள் கங்கை சுத்திகரிப்பு என்ன ஆனது? 2022க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவது என்ன ஆனது? 2022ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது என்ன ஆனது? முதல் புல்லட் ரயில் என்ன ஆனது?

பழைய உத்தரவாதங்களுக்கு பொறுப்பேற்காமல் வெற்று வார்த்தை ஜாலங்களே இம்முறை இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி தற்போது 2047ஐ பற்றி பேசி இலக்குகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒருவார்த்தை இல்லை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘‘பாஜவின் தேர்தல் அறிக்கையிலும், மோடியின் பேச்சிலும் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகிய இரண்டு வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்தியா கூட்டணியின் திட்டம் மிகத் தெளிவாக உள்ளது. இம் முறை இளைஞர்கள் மோடியின் வலையில் சிக்கப் போவதில்லை. அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி, ஆட்சியைக் கொண்டுவருவார்கள். நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சி ஏற்படும்’’ என கூறி உள்ளார்.

The post தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜால வாக்குறுதிகள்; பழைய உத்தரவாதங்கள் என்னாச்சு..? பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: