ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது வேலூர் கோட்டையில் பிரசித்தி பெற்ற

வேலூர், ஏப்.14: வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 43ம் ஆண்டு பிரமோற்சவத்தையொட்டி கடந்த 11ம் தேதி கிராம தேவதை செல்லியம்மன் உற்சவமும், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவமும் நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து காலையில் சுவாமி வீதி உலா நடந்தது. மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. இன்று, நாளை, 16, 17, 18 ஆகிய தேதிகளில் காலையில் விநாயகர் சந்திரசேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 18ம் தேதி மாலை 63 நாயன்மார்கள் உற்சவமும், 19ம் தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் திருத்தேரோட்டமும் நடக்கிறது. 20ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 21ம் தேதி காலையில் விநாயகர்  சந்திரசேகரர் புறப்பாடும், 21ம் தேதி புருஷா மிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

22ம்தேதி காலையில் நடராஜருக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 23ம் தேதி காலை பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம்,  ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. 24ம் தேதி மாலை விடையாற்றி உற்சவமும், 25ம் தேதி உற்சவசாந்தி உற்சவம் அபிஷேகம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.

The post ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது வேலூர் கோட்டையில் பிரசித்தி பெற்ற appeared first on Dinakaran.

Related Stories: