கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்: ‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏத்தீட்டாங்க… சும்மா விடக்கூடாது… மோடி அரசை தூக்குவோம்…’

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மகளிர் பேரணி நடைபெற்றது. இதில் திறந்த வேனில் நின்றவாறு நிர்மலா சீதாராமன் ஓட்டு கேட்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேரணியில் நிர்மலா சீதாராமன், கை கூப்பி வணங்காமல் ஜாலியாக நின்று கொண்டே வந்தார். சில இடங்களில் மட்டுமே வாக்காளர்களிடம் கை கூப்பி ஓட்டு கேட்டார். மேம்பாலத்தில் இருந்து சிலர் மலர் தூவியபோது மட்டும் சிரித்து மகிழ்ந்தார். பொதுமக்கள் கை குலுக்கி பேச வந்தபோது அவர் கையை அசைத்து சென்றுவிட்டார்.

இந்த பேரணியின்போது சிவானந்தா காலனி ரவுண்டானா பகுதியில் காரில் சென்ற ஒருவர், பேரணியில் நிர்மலா சீதாராமன் பிரசார வாகனத்தின் முன் காரை நிறுத்தினார். ‘‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏத்தீட்டாங்க, சும்மா விடக்கூடாது. மோடி அரசை தூக்குவோம்’’ என கட்டை விரலை உயர்த்தி காட்டினார். இதைக்கேட்ட அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் சிரித்து கொண்டே கட்டை விரலை காட்டி உயர்த்தி காட்டினர். பேரணியில் நடந்த திடீர் எதிர்ப்பை பார்த்த பாஜவினர் அதிர்ந்து போயினர். சிலர் காரில் வந்தவரின் எதிர்ப்பு கோஷத்தை செல்போனில் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேரணியில் மிக குறைந்த அளவிலே பெண்கள் முன்னும் பின்னும் சென்றனரே தவிர ரோட்டின் இரு பக்கங்களிலும் மக்கள் யாரும் நின்று வரவேற்கவில்லை. வழக்கமான வாகன போக்குவரத்து நடந்தது.

The post கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்: ‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏத்தீட்டாங்க… சும்மா விடக்கூடாது… மோடி அரசை தூக்குவோம்…’ appeared first on Dinakaran.

Related Stories: