ஆணவத்திமிறால் பேசாதப்பா… அதிமுக ஒரு மாதிரியான கட்சி, கொஞ்சம் பார்த்து பேசுங்கள்…அண்ணாமலைக்கு எடப்பாடி எச்சரிக்கை

சேலம்: சேலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்து பேசினார். சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேசை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் இன்னொருவர் புதுசா வந்துட்டார். அவர் பாஜ தலைவர் அண்ணாமலைதான். இவர் 2027ல் அதிமுகவை அழிக்கப் போகிறாராம்.

தம்பி… அதிமுக தெய்வத்தால் உருவான கட்சி. உன் பாட்டனை பார்த்த கட்சி. உன்னைப்போல எத்தனையோ பேர் கொக்கரித்தார்கள். ஆணவத்திமிறால் பேசாதேப்பா. 30 ஆண்டு ஆட்சி செய்த கட்சி. யப்பா… எங்கள் கட்சியையா அழிக்கப் பார்க்கிறாய். 1998ம் ஆண்டு தாமரை சின்னத்தை ஊர் ஊராக காட்டியது அதிமுக. தாமரை என்றால் எந்த கட்சிக்குமே தெரியாது. ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்து இதுதான் தாமரை என ஊர் ஊராக காட்டினார்.

ங்கள் எல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் ஆனவர்கள். மத்தியில் இருப்பவர்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்தால் தலைவராக இருப்பீர்கள். எப்போதும் தலைவரை மாற்றலாம். அதிமுக அப்படி அல்ல. உழைக்கிறவர்கள் தலைவராக வரமுடியும். நான் கிளைச்செயலாளாக இருந்தேன். ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, என வந்த பிறகு தான் முதலமைச்சராக உயர்ந்தேன். அங்கே டெல்லியில் இருப்பவர்கள் நினைத்தால் நீங்கள் தலைவராகலாம். கவனமாக பேசுங்கள்.

அதிமுக ஒரு மாதிரியான கட்சி. கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். யாருக்கும் அஞ்சாமல், யாருக்கும் அடிமை இல்லாமல், துணிச்சலோடு சவால் விடும் கட்சி அதிமுக. 500 நாளில் 100 திட்டத்தை நிறைவேற்றப்போகிறேன் என்கிறார். பொய்யை பொருந்துவதுபோல் பேசினால் உண்மை திருதிருவென முழிக்குமாம். ஏற்கனவே 2014ல் 520 அறிவிப்பை வெளியிட்டு, நாட்டு மக்களை ஏமாற்றியது பத்தாது என நீ வேறு புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறாய். இவர் கவுன்சிலராக முடியவில்லை.

எம்எல்ஏ ஆக முடியவில்லை. எம்.பி.யாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்கிறாய். பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என எம்ஜிஆர் பாடினார். அது உங்களிடம் இல்லை. தலை கர்வத்தில் ஆடாதீர்கள். இது நிலைக்காது. பிரதமர் மோடி வாரிசு அரசியலை ஒழிப்போம் என்கிறார். அவர் கூட்டணியில் இருப்பது யார்? பாமகவில் வாரிசு அரசியல் இல்லையா. இவரோடு சேர்ந்தால் நல்லவர். இல்லை என்றால் கெட்டவர். அதிமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆணவத்திமிறால் பேசாதப்பா… அதிமுக ஒரு மாதிரியான கட்சி, கொஞ்சம் பார்த்து பேசுங்கள்…அண்ணாமலைக்கு எடப்பாடி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: