2 நாட்கள் நடக்கிறது; 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம்

கோவை, ஏப் 11: பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் மணிக்கூண்டு அருகில் நேற்று நடந்தது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள், குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள், ராட்சத பலூன், டி-சர்ட், தொப்பி, சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் 100 சதவீத வாக்களிப்பினை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று மற்றும் இன்று ஆகிய 2 நாட்கள் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி 2 நிமிடம் நடத்தப்படுகின்றது. அதன்படி, நேற்று கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கியமான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஆர்.எஸ்புரம் மணிக்கூண்டு, காந்திபுரம் பேருந்து நிலைய சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, கணபதி பேருந்து நிறுத்தம், பந்தய சாலை மீடியா டவர், உக்கடம் பேருந்து நிலைய சந்திப்பு ஆகிய இடங்களில் வர உள்ள பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு, என் ஓட்டு என் உரிமை, வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் கடை வீதி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. நேற்று துவங்கிய இந்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 2 நாட்கள் நடக்கிறது; 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம் appeared first on Dinakaran.

Related Stories: