தேனி உழவர் சந்தையில் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதக்வர் மு.க.ஸ்டாலின் இரவு தேனியில் தங்கினார். நேற்று காலை 7.30 மணியளவில் விடுதியில் இருந்து புறப்பட்ட முதல்வர், தேனி கான்வென்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கு சாலையோரம் கடை வைத்திருந்த முருகேஸ்வரி என்ற பெண்ணிடம், வியாபாரம் குறித்து கேட்டறிந்தார். அந்த பெண்மணி தனக்கு தள்ளுவண்டி வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

இதையடுத்து தாலுகா அலுவலகம் எதிரே காய்கறி கடை வைத்துள்ள தெய்வஜோதியிடம் நலம் விசாரித்தார். ‘‘காய்கறிகளை எங்கிருந்து வாங்குகிறீர்கள்? வியாபாரம் எப்படி இருக்கிறது’’ என கேட்டார். இதற்கு அந்த பெண்மணி வியாபாரம் நன்றாக நடப்பதாக தெரிவித்தார். அப்போது திடீரென பெண் பழ வியாபாரி ஒருவர், முதல்வரிடம் பாசத்துடன் பழங்களை பரிசாக வழங்கினார். முதல்வரும் மகிழ்ச்சியுடன் அவற்றை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து உழவர் சந்தைக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். உழவர் சந்தையில் இருந்த சிற்பக்கலைஞர் இளஞ்செழியன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கதமிழ்ச்செல்வன் உருவங்கள் பொறித்த இரு தர்பூசணி பழங்களை, இருவருக்கும் வழங்கினார். இருவரும் மகிழ்ச்சியுடன் அவற்றை பெற்றுக் கொண்டனர்.

பின்னர் உழவர் சந்தையில் ஒவ்வொரு கடைக்கும் சென்ற முதல்வர், விவசாயிகளிடம், ‘‘தோட்டத்தில் இருந்து நேரடியாக காய்கறிகளை கொண்டு வருகிறீர்களா’’ என கேட்டறிந்தார். உழவர் சந்தை அருகே முதல்வரை சந்தித்த சகாதேவன் என்ற முதியவர், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் மூலம் தற்போது ₹1,200 உதவித் தொகை வழங்கி வருவதாகவும், அதை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சிறுவர்கள் பாச மழையில் முதல்வர்
உழவர் சந்தையில் வாக்கு சேகரித்தபோது அங்கு தாயாருடன் நின்றிருந்த சிறுவன் சம்யுக்தன் (4) திடீரென முதல்வரை ‘தாத்தா’ என்று அன்புடன் அழைத்தான். இதைக் கேட்டு நெகிழ்ந்த முதல்வர் அவர்களுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக் கொண்டார். பிரசாரத்தை முடித்து வேன் மூலம் தேனி என்ஆர்டி நகரில் உள்ள பாரஸ்ட் ரோடுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பாண்டியன் என்பவரது டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். என்ஆர்டி நகருக்கு செல்லும் வழியில் சிறகுகள் என்னும் உடற்பயிற்சி கூடத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, வேனை மறித்து முதல்வரை ஒரு குழந்தை முத்தமிடும் போட்டோ பிரேமை வழங்கினார். அதை முதல்வர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். மேலும், தனியார் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post தேனி உழவர் சந்தையில் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: