பணம் பட்டுவாடா செய்பவர்களை கண்காணிக்க தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அனைத்து மாவட்டத்துக்கும் செல்கிறார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பறக்கும் படை, கண்காணிப்பு நிலை குழு மற்றும் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.255 கோடி பணம் மற்றும் தங்க நகை, பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் வருமான வரித்துறையினர் மட்டுமே ரூ.50.86 கோடி பறிமுதல் செய்துள்ளனர். தாம்பரம் ரயிலில் பறக்கும் படை சோதனையில்தான் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையுடன் தேர்தல் செலவின பார்வையாளரும் சேர்ந்து சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இதுவரை 1,07,186 தபால் வாக்குகளும், காவல் துறையினர் 1,07,186 தபால் வாக்குகளும் செலுத்தியுள்ளனர். டிரைவர், கிளீனர் என 3,423 பேர் தபால் வாக்கு பதிவிட்டுள்ளனர். தங்களது பெயர் எந்த தொகுதியில் உள்ளதோ அதே தொகுதிக்குள் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,75,606 பேர் வாக்குப்பதிவு அன்று தாங்கள் பணி செய்யும் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களிப்பார்கள். அதேபோன்று 85 வயதுக்கு மேற்பட்ட 82,666 பேரும், மாற்றுத்திறனாளிகள் 50,665 பேரும் 12டி விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இவர்களில் இதுவரை 70,258 பேர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்பட்டுள்ளது. 18ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.

இதையொட்டி தமிழகத்திற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பணம் கொடுப்பதாக வந்த புகார் மீது எடுக்கும் விசாரணைகள் ரகசியமாக வைக்கப்பட்டு, நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி நடக்காமல் பணியில் மெத்தனமாக இருக்கும் பறக்கும் படை அதிகாரிகள் சிலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பணியில் தொடருவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்து அறிவிப்பார். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும்.

இதுகுறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வார்கள். வெளிமாநிலங்களில் இருந்து ஊர்காவல் படை வீரர்களை அனுப்பும்படி போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்பாளர்கள் மீது இதுவரை எந்த தனிப்பட்ட புகாரும் வரவில்லை. சி-விஜில் மூலம் 3,221 புகார் வந்துள்ளது. அதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 புகார்கள் மீது மட்டுமே இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தவர்களிடம் பேச்சு
தேர்தலை புறக்கணிக்கப்போவதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் உள்ள சிலர் அறிவித்து உள்ளனர். அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களை கண்டிப்பாக வாக்களிக்க வலியுறுத்தப்படும். பிரச்னைகளை தீர்த்து வைக்க முடிந்தால் அதையும் செய்வார். பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால் எதுவும் செய்ய முடியாது. சுகி, ஷோமோட்டா மற்றும் இணையதளங்களில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அனுமதி பெறாமல் விளம்பரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post பணம் பட்டுவாடா செய்பவர்களை கண்காணிக்க தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அனைத்து மாவட்டத்துக்கும் செல்கிறார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: