மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.525 கோடி மோசடி புகாரில் சிக்கிய பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு இந்திய கம்யூ. கடிதம்

சென்னை: மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.525 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடுக்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில கவுன்சில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: சிவகங்கை பாஜ வேட்பாளர் டி.தேவநாதன் நிறுவன தலைவர் மற்றும் இயக்குநராக உள்ள சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.525 கோடியை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. முதலீடு செய்த தொகையை திரும்ப கேட்டால் தரமுடியாது என்றும், மீறி போலீசில் புகார் செய்தால் உங்கள் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அச்சுறுத்தியதாகவும் முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் இந்த நிதி நிறுவனம் வழங்கிய 150க்கும் மேற்பட்ட காசோலைகள் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று அறிவித்து நடுத்தரவர்க்க மக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற முதியோர். இவர்களின் முதலீட்டு தொகையை மீட்டெடுத்து வட்டியோடு திரும்பி வழங்க தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரூ.500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ள டி.தேவநாதன் மீது பண மோசடி தடுப்புச் சட்டப்படி அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதுடன், பெரும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை சுமந்தபடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி மோசடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநராக உள்ள டி.தேவநாதனுக்கு வாக்கு கேட்டு பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடியுடன் மேடையில் ஒன்றாக நின்று தன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுள்ளாரோ என்ற ஆழ்ந்த சந்தேகமும், முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியுள்ளது. ஆகவே, சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார். ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.525 கோடி மோசடி புகாரில் சிக்கிய பாஜ வேட்பாளர் தேவநாதன் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு இந்திய கம்யூ. கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: