நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு

*கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.19.4.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 147.பெரம்பலூர் (தனி), 146.துறையூர்(தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கற்பகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் 1, வாக்குப்பதிவு அலுவலர் 2, வாக்குப்பதிவு அலுவலர் 3 ஆகியோர் பணி நியமனம் செய்யப்படுவர். 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் கூடுதலாக நியமிக்கப்படுவர். அதனடிப்படையில், 137. குளித்தலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,320 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும், 143 லால்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 251 வாக்குச்சாவடி மையங்களில், 1,283 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும், 144.மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 273 வாக்குச்சாவடி மையங்களில், 1,335 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும், 145.முசிறி சட்டமன்ற தொகுதியில் உள்ள 260 வாக்குச்சாவடி மையங்களில், 1,296 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும், 146 துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களில் 1,411 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும், 147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 1,645 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும் பணியாற்ற உள்ளனர்.

பெரம்பலூர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தகவல்களும் முறையாக எடுத்துரைக்கப்பட்டதா என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளும் விதம் குறித்து செயல் விளக்கம் காட்டப்பட்டதா என்றும் பயிற்சி பெற்றவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவை மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.பின்னர் துறையூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்காக சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினையும், தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவை மையத்தினையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கோகுல் (பெரம்பலூர்), குணசேகரன் (துறையூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), வனஜா (துறையூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தபால் வாக்கு செலுத்திய அலுவலர்கள்

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களில் தாங்கள் வாக்காளராக உள்ள சட்டமன்ற தொகுதி அல்லாமல் வேறு சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு தேவையான வசதிகள் நடைபெற்ற பயிற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்ததை கலெக்டர் பார்வையிடாடார்.

பயிற்சி வகுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அளித்தனர். மேலும் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: