காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது தெரியுமா?

விழுப்புரம் : விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது ஜம்மு – காஷ்மீருடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

ஒருவேளை ஜம்மு -காஷ்மீர் தேர்தல் தேதி தள்ளிப்போனால் அக்டோபர் மாதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அச்சமயத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.

The post காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? appeared first on Dinakaran.

Related Stories: