திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு தேடிச்சென்று மாற்றுத்திறனாளி, மூத்த வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகளை பெறும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் பல்வேறு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, தபால் வாக்குகளை அளிக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தபால் வாக்குகளை அளிப்பதற்கான 12டி படிவத்தை சம்பந்தப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச்சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நேரில் ஏற்கனவே வழங்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மொத்தம் 31,690 பேர் உள்ளனர். அதில், 3,844 பேர் தபால் மூலம வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு, தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 35,544 பேர் உள்ளனர். அதில், 3,699 பேர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதையொட்டி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வசிக்கும் முகவரிக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பெறுவதற்கான தேர்தல் பணி அலுவலர்கள் கொண்ட வாகனங்களை நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

தபால் வாக்குகளை பெறும் தேர்தல் பணி குழுவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குப்பதிவு உதவி அலுவலர் நுண் பார்வையாளர் மற்றும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் இடம் பெற்றுள்ளனர். மேலும், வேட்பாளர் அல்லது அனுமதிக்கப்பட்ட முகவர்கள் தபால் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 9ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை பெறும் குழுவினர் செல்லும்போது, சம்பந்தப்பட்ட முகவரியில் உரிய வாக்காளர் இல்லாத நிலையில், மற்றொரு முறை வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரணி: ஆரணி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று தபால் வாக்கு பெறும் பணி நேற்று துவங்கியது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்பட்ட தபால் வாக்குகளை போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் கொண்டு வந்து, ஆரணி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனர். அப்போது, தாசில்தார் மஞ்சுளா, வட்ட வழங்கல் தாசில்தார் மூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலை, தலைமையிடத்து துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு தேடிச்சென்று மாற்றுத்திறனாளி, மூத்த வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி appeared first on Dinakaran.

Related Stories: