விஏஓக்கள் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு குடியாத்தத்தில் ஆலோசனை கூட்டம்

குடியாத்தம், ஏப்.6: வாக்குச்சாவடி மையங்களில் கழிவறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதை விஏஓக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் கூறினார். வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீரான முறையில் உள்ளதா என உறுதி செய்யவும், வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, பணிகளை சரியாக மேற்கொள்வதை உறுதி செய்யவும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள 26 மண்டல அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:

ஒவ்வொரு மண்டல அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று அங்கு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் இது குறித்த தகவல்களை தெரிவித்து உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் மற்றும் இதர பதிவேடுகளை கையாளும் முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று காலை குறிப்பிட்ட நேரத்தில் மாதிரி வாக்கு பதிவு நடைபெறுவதையும், பின்னர் முறையான வாக்குப்பதிவு தொடங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள கழிவறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி ஆகியோர் கலந்த கொண்டனர்.

The post விஏஓக்கள் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு குடியாத்தத்தில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: