பறக்கும் படை பறிமுதல் செய்யும் பொருட்களை ஓரிரு நாட்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்: வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சென்னை: சென்னை வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் அசோக் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் தொழில் முழுக்க முழுக்க நகை கடைகளை சார்ந்து உள்ளது. தேர்தல் காலங்களில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடாவை தவிர்க்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை செய்து வருகிறது. அத்தகைய சோதனைகளில் நகைக் கடை உரிமையாளர்களால் மற்றும் உற்பத்தியாளர்களால் வணிகத்துக்காக கொண்டு செல்லப்படும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பொருட்களின் ஆவணங்களின் உண்மை தன்மையை அறிவதற்காக வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்படி ஒப்படைக்கப்பட்ட பொருட்களின் ஆவணங்கள் முறையானதாக இருக்கும் பட்சத்தில் அது சோதனைக்கு பின் உரிய நபர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான கால அவகாசமாக 20லிருந்து 25 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காலஅவகாசம் நகை கடைக்காரர்களை நேரடியாகவும் இந்த தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களை மறைமுகமாகவும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

எனவே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் ஆவணங்களை சரிபார்த்து சோதனை செய்து ஓரிரு நாட்களில் திரும்ப ஒப்படைத்தால் இந்த தொழிலை நம்பி இருக்கும் எங்களைப் போன்ற குறுந்தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் பெறும் உதவியாக இருக்கும். தொழில்நுட்பம் பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ள காலகட்டத்தில் இதனை இந்த பிரச்னையை தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய முன்வர வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விரைவாக மீட்க கூடுதலாக என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

The post பறக்கும் படை பறிமுதல் செய்யும் பொருட்களை ஓரிரு நாட்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்: வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: