கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ‘கதை சொல்லி’ நிர்மலாவுக்கு பரிசு, பாராட்டு

5 ஆண்டுகளாக நம்பிக்கை ஊட்டி மக்களுக்கு சேவை

கோத்தகிரி : கர்ப்பிணிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கதைகள் மூலம் ஊக்கங்களையும், விழிப்புணர்வையும் வழங்கி வரும் சமூக சேவகர் ‘கதை சொல்லி’ நிர்மலாவுக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் தலைமை மருத்துவர் சிவகுமார் துவங்கி வைத்தார்.

முன்னதாக மருத்துவர் சுரேந்தர் அனைவரையும் வரவேற்றார். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு நேரில் சென்று கர்ப்பிணிகளுக்கு கதைகள் மூலம் விழிப்புணர்வு கொடுத்து வந்தவர் சமூக ஆர்வலர் நீலகிரி நிர்மலா. இவர் கொரோனா காலங்களில் செல்ல முடியாத கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கும் கதைகள் மூலம் விழிப்புணர்வை கொடுக்க துவங்கினார்.

நீலகிரியில் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்றாலும், அன்று முதல் இன்று வரை 5 ஆண்டுகளாக கருவோடு கதை கதைப்போமா, கர்ப்பிணி பெண்களின் கர்ப்ப காலங்கள் – சுமையல்ல சுகம் என கதைகள் மூலம் ஊக்கங்களையும், விழிப்புணர்வுகளையும் அளித்து கொண்டிருக்கின்றார். தன்னலமற்ற இவரது சேவையை பாராட்டி ‘கதை சொல்லி’, ‘கலைச்சுடர் மணி நீலகிரி நிர்மலாவுக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனை சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.

அகில இந்திய உதவிக்கரம் மக்கள் நலச்சங்கம் மற்றும் ஜெசிஐ குன்னூர் ஆகியவை இணைந்து மருத்துவமனைக்கு தேவையான 10 நாற்காலிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தேவையான உலர் பழ வகைகள், ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டது. இதையடுத்து கதைசொல்லி நீலகிரி நிர்மலா, கருவோடு கதை கதைப்போமா, கர்பிணிகளுக்கு கதை சொல்லல் நிகழ்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அஇஉமந சங்கம் நாகராஜ், செயலர் கலையரசன், ஜெசிஐ குன்னூர் தலைவர் அசோக், வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கலாநிதி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 5 ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு நம்பிக்கை ஊட்டி, அச்சத்தை போக்கி மக்களுக்கு சேவையாற்றி வரும் கதை சொல்லி நிர்மலாவுக்கு பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு குவிந்து வருகிறது.

The post கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ‘கதை சொல்லி’ நிர்மலாவுக்கு பரிசு, பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: