மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில்

பள்ளிகொண்டா, ஏப்.5: பள்ளிகொண்டா துளசி நகரில் மினி லாரி மோதி மின்கம்பம் உடைந்தது. பள்ளிகொண்டா பேரூராட்சி 16வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள துளசி நகரில் நேற்று மாலை ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்றுள்ளது. தொடர்ந்து அங்கு சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு கற்களை இறக்கிவிட்டு துளசி நகர் தெரு முனையில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பம் மீது மோதியுள்ளது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து மின்கம்பிகள் தொங்கியுள்ளது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளிகொண்டா மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மின்வாரியத்தினர் லாரியின் உரிமையாளர் மின்கம்பம் மாற்றியமைப்பதற்கான பணத்தை கட்டினால் மட்டுமே சீரமைக்க முடியும் என கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாலை 3 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் மின் இணைப்பு இல்லாமல் கோடை வெயிலில் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். ஒருவழியாக லாரியின் உரிமையாளர் இரவு 7 மணிக்கு அதற்குண்டான பணத்தை கட்ட அதன்பிறகு மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தினை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில் appeared first on Dinakaran.

Related Stories: