முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்றால் பங்கிற்கு ‘சீல்’ காவல் ஆய்வாளர் எச்சரிக்கை மக்களவை தேர்தல் எதிரொலி

ஒடுகத்தூர், ஏப்.5: மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஒடுகத்தூர் பகுதிகளில் முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்றால் பங்கிற்கு சீல் வைக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேர்தலில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவமும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் மக்களவை தேர்தலில் எந்த ஒரு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் பேசுகையில், ‘வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். அன்னிய நபர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் நிரப்ப கூடாது. அதேபோல், சில்லறையில் பெட்ரோல், டீசல் வாங்க வரும் நபர்களுக்கும் கட்டாயம் எரிபொருள் கொடுக்க கூடாது. முறைகேடாக பெட்ரோல், டீசல் யாருக்காவது கொடுத்து அதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மட்டுமின்றி பங்கிற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதில், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்றால் பங்கிற்கு ‘சீல்’ காவல் ஆய்வாளர் எச்சரிக்கை மக்களவை தேர்தல் எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: