தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு: மாவட்ட போலீஸ் எஸ்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவ – மாணவிகளிடையே தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 100 சதவீதம் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல், மனித சங்கலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கல்லூரி மாணவ – மாணவிகள் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான வடிவமைப்பினை ஏற்படுத்தி, தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட போலீஸ் எஸ்பி தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், கட்டவாக்கம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின், அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம், 100 சதவீதம் வாக்கு பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் குறும்படங்கள், பொதுமக்கள் அறிந்திடும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா, சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாசு, வேதியியல் துறை தலைவர் வெங்கட்ரமணன், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு: மாவட்ட போலீஸ் எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: