பொய்களை கூறி பிரசாரம் செய்யும் மோடி, அண்ணாமலை: ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்

1. பழங்குடி இனத்தை சேர்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியால் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறாரே?

பாஜவை ஆர்.எஸ்.எஸ். தான் பின்னால் இருந்து இயக்கி வருகிறது. உயர்சாதி இயக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம். பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம் என்று அரசியலுக்காகவும் அலங்காரத்திற்காகவும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் பாஜவுக்கு துளியும் கிடையாது. இந்த சித்தாந்த பின்னணியில் தான் இதுபோன்ற அவமதிப்புகள் நடைபெற்று வருகிறது.

2. தேர்தலுக்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழக வருகை பற்றி?

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாகத் தான் அதிமுகவில் சிதைவுகள் ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள், முன்பு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுகவும் சரி, ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களை துணிந்து எதிர்த்து நின்றார்கள். அத்தகைய துணிவு எடப்பாடிக்கு இல்லை. அதன் காரணமாகத் தான் அந்த கட்சி சிதைவுண்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டி கால் பதித்து விடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், நிச்சயமாக அவர்களால் அது இயலாது என்பதை ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதும் உணர்ந்தும் மீண்டும் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் கச்சத்தீவு பிரச்னை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கும் இதுதான் காரணம். அவர் எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது.

3. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை நாகரிகம் இல்லாமல் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சிக்கிறாரே? அண்ணாமலையிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். அவருடையை தலைவர் மோடி, பல்வேறு பொய்களை சொல்லி பிரசாரம் செய்கிறார். அவருடைய தலைமையை ஏற்று, அதே பொய்களை கூறி பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு மக்கள் சரியான வரவேற்பு கொடுப்பதில்லை. அவர் பேச்சை மக்கள் செவி கொடுத்து கேட்பதில்லை. அவர் என்ன பேசினாலும் அது அவருக்கே திருப்பி அடிக்கிறது. அதனால்தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார்.

4.உங்கள் தேர்தல் பிரசாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

இந்தியா நமது விடுதலை போராட்ட வீரர்கள் கனவு கண்ட நாடு. 2024 தேர்தல் இந்தியாவின் திசை வழி நோக்கை தீர்மானிக்க கூடிய தேர்தலாக நான் பார்க்கிறேன். மக்களாட்சி தத்துவத்தை தூக்கி பிடிக்க கூடிய, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய இந்தியாவாக தொடர வேண்டுமா அல்லது ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சித்தாந்தம் இதை நோக்கி போகக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டுமா என்ற தேர்தலாக நான் பார்க்கிறேன். மீண்டும் பாஜக வந்தால் இந்த அவல நிலை வந்துவிடும். விடுதலை போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களிடம் எப்படி போராடினார்களோ, அதே உணர்வோடு மக்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டு சாரை சாரையாக வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு அளிக்க வேண்டும் என்பதைதத்தான் எனது பரப்புரையில் சொல்லி வருகிறேன்.

The post பொய்களை கூறி பிரசாரம் செய்யும் மோடி, அண்ணாமலை: ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: