ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கூறி முதல்வராகி விட்டு ஆந்திராவை கடனில் மூழ்கடித்து விட்டார் ஜெகன்: காங். மாநில தலைவர் குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுபுலபாயாவில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி நினைவிடத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா நேற்று மரியாதை செய்து கடப்பா தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆசி பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடப்பா எம்பி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்த முடிவு எனக்கு எளிதானதல்ல. இந்த முடிவு என் குடும்பத்தை பிரிக்கும் என்று தெரியும். எனது தந்தை ஒய்எஸ்ஆர் ஆதரவாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஜெகன்மோகன் எனது மூத்த சகோதரர். எனது அண்ணனை வெறுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் என்னை குழந்தை என்றார். ஆனால் முதல்வரான பிறகு மாறிவிட்டார். கொலைகார அரசியலை ஜெகன் ஊக்குவிக்கிறார்.

கடப்பாவில் எம்.பி. வேட்பாளராக சித்தப்பா விவேகானந்தாவை கொன்றவர்களுக்கு சீட் கொடுத்தார். இதைத்தாங்க முடியவில்லை. அனைத்து ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை ஜெகன் பாதுகாத்து வருகிறார். அவினாஷ் ரெட்டிக்கு மீண்டும் சீட் கொடுத்ததை சகிக்க முடியவில்லை. விவேகானந்தா கொலை அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டதை தாமதமாக புரிந்து கொண்டோம். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கடந்த முறை பிரசாரம் செய்து முதல்வரான ஜெகன், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை கடனால் மூழ்கடித்துள்ளார்.

இம்மாதம் 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்க உள்ளேன். எனது தந்தை மறைந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்திருந்தால் தற்போது ராகுல் பிரதமராகியிருப்பார். காங்கிரஸின் வெற்றிக்காக உழைக்க அனைவரும் தயாராக இருக்கிறோம்.
ஜெகனும், சந்திரபாபுவும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக உழைத்ததில்லை. மாநில உரிமைக்காக ஒரு போராட்டம் கூட செய்யவில்லை. சிறப்பு அந்தஸ்து கொடுத்திருந்தால் மாநிலம் முன்னேறியிருக்கும். இவ்வாறு கூறினார்.

The post ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கூறி முதல்வராகி விட்டு ஆந்திராவை கடனில் மூழ்கடித்து விட்டார் ஜெகன்: காங். மாநில தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: