100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி வாகனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். பூந்தல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் த.பிரபு சங்கர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனதை தொடங்கி வைத்து ஒருவிரல் புரட்சியினை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், வருவாய் கோட்ட அலுவலர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் தூதுவரான பாடகர் மனோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசுகையில், நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வுக்காக பனிமலர் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒரு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது திருவள்ளூர் தொகுதி முழுவதும் தேர்தல் விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கான வாகனம். இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து தேர்தல் அம்சங்களுடன் கூடிய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான பல்வேறு அம்சங்களுடன் கூடிய வகையில் நம்முடைய ஜனநாயக வரலாறு பற்றியும், இந்திய தேர்தல் தொடர்புடைய செய்திகள் பற்றியும், இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்த பல்வேறு தகவல்களும், மாதிரி வாக்குச்சாவடிகள் கொண்ட பல்வேறு அம்சங்களுடனும் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

மேலும் ஒரு தொடுதிரை மூலம் மாணவர்கள் மற்றும் வாக்காளர்கள் கேட்கும் 10 கேள்விகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ளலாம். திருவள்ளூர் தொகுதிக்குச் சென்று கண்டிப்பாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பாடகர் மனோ பாடியுள்ள தேர்தலில் திருவிழா தேசத்தின் திருவிழா என்ற தலைப்பில் தேர்தல் கீதம் பாடல் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு காணோலி காட்சியாக ஒளிப்பரப்பட்டது. அதேபோல தேர்தலில் வாக்களிப்பவர்தான் சூப்பர் ஹீரோ என்ற அனிமேசன் குறும்படமும் உருவாக்கப்பட்டு ஒளிப்பரப்பட்டது. 30 வினாடிகள் கொண்ட இந்த படமும் நம்முடைய திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிறப்பு ஸ்ட்ரீட் ஆக்டிவிட்டியாக இருக்கும். இந்த தேர்தலில் அனைவரும் வரும் 19ம் தேதி கண்டிப்பாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அந்த நாளில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக வாக்காளர் தின உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொள்ள மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் தங்களது கருத்தினை தெரிவித்தார்கள். மேலும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த தேர்தல் கீதம் பாடலுக்கு கல்லூரி மாணவ மாணவியர்கள் நடனம் ஆடினர். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சரஸ்வதி துணை வட்டாட்சியர் (தேர்தல்) விஜய் ஆனந்த், துணை வட்டாட்சியர்கள் அருள்குமார், சந்திர சேகர், வருவாய் ஆய்வாளர்கள் சரண்யா, லலிதா, ஐயப்பன், சிவசக்தி முருகன், பொன்மலர், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பனிமலர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி வாகனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: