பாஜக அரசின் திட்டமிடாத பணியால் தனுஷ்கோடி சாலை திட்டத்தில் ரூ.80 கோடி வீணடிப்பு: கடல் சீற்றத்தில் சிக்கி தவிக்கும் சாலை


மண்டபம்: இயற்கையின் சீற்றம் மணலின் தன்மை குறித்து முறையான ஆய்வு செய்யாமல் இரண்டு கடல்களின் நடுவே மணல் மற்றும் கற்கள் மேவி சாலை அமைக்கப்பட்டது. இது இயற்கை சீற்றத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து சாலை சேதமானதால் ஒன்றிய அரசு ரூ.80 கோடிக்கு மேல் வீணடித்துள்ளது. ராமேஸ்வரத்தில் 1964ம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடி மிகப்பெரிய இந்திய,இலங்கை இரு நாடுகளுக்கு வர்த்தக பகுதியாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 1964ம் ஆண்டு டிச.22 மற்றும் 23ம் தேதிகளில் கடலில் ஏற்பட்ட பெரும் புயல் பேரழிவில் தனுஷ்கோடி நகரமே சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும், குடியிருப்பு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு பெரும் சீரழிவை ஏற்படுத்தியது. புயலின் தாக்கத்திற்கு பின்பு அப்பகுதியில் எஞ்சியது கோவில்கள் மற்றும் அரசு கட்டிடங்கள்,ரயில் நிலைய கட்டிடங்கள் தான்.

புயலுக்கு பின்னால் ராமேஸ்வரம் பகுதியை முன்னிறுத்தி பொதுமக்கள் வசித்து வந்தனர். மேலும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசாமி கோவிலை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்களும்,சுற்றுலாவாசிகளும் புயலில் அழிந்து போன பகுதியை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு வரை ராமேஸ்வரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் அமைந்துள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதி வரை பேருந்துகளிலும், வாகனத்திலும் சென்று அப்பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு மினி டோர் வாகன மூலம் தனுஷ்கோடி பகுதிக்கும் மற்றும் மூன்று கடல் இணையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கும் சுற்றுலா வாசிகளும் பக்தர்களும் சென்று பார்வையிட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை ஏற்று 2015ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய அரசு முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து தனுஸ்கோடி மற்றும் அரிச்சல் முனை பகுதிவரை 7 கிலோமீட்டர் தொலை தூரத்திற்கு முதல் கட்டமாக ரூ.50 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடித்து 2017ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி அந்த சாலை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன் பின்னர் தென்கடலும், வடகடலும் இணையும் கடல் பகுதியில் மணல் மேவி பாரங்கற்களை குவித்து சாலை அமைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டு காலமாக இயற்கையின் கடல் சீற்றத்தில் இந்த சாலை சிக்கி அவ்வப்போது சேதம் அடைந்து விடும்.

இதனால் கடல் சீற்றத்தில் இருந்து சாலையை காப்பதற்காக 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மீண்டும் பராமரிப்புக்கு பணிகள் என தவணை முறையில் ரூ.30 கோடி முதல் 50 கோடி வரை ஒன்றிய அரசு மேற்கொண்டு நிதி ஒதுக்கி சாலையின் இருபுறமும் கருங்கற்கள் அமைத்து சாலையை பாதுகாக்கும் பணிகளை அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை பகுதி வரை எதிர்ப்பாரத விதமாக திடீரென தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலை தடுப்பு கற்களை தாண்டி, சிறிய கற்களுடன் சாலை மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் நேற்று அந்த பகுதியில் பார்வையிடுவதற்காக சென்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கடல் அலை தண்ணீரை பார்த்து அச்சமடைந்து ராமேஸ்வரத்தை நோக்கி பதற்றமாக வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில் பாஜக ஒன்றிய அரசின் மெத்தன போக்கால் அந்த பகுதியில் மணலில் தன்மையும் மற்றும் கடலின் சீற்றம் குறித்து திட்டமிடாமலும், முறையாக ஆய்வு செய்யாமல் சாலை அமைக்கப்பட்டது. இதனால் இன்றைய நாள்வரை அந்த சாலை கடல் சீற்றத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது. இதனால் இந்த சாலை அமைப்பதற்கு செலவிடப்பட்ட ரூ.100 கோடி வரை ஒன்றிய அரசு வீணடிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் தனுஷ்கோடி முதல் முகுந்தராய சத்திரம் பகுதி வரை பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்பட்டு தென்கடல் மற்றும் வடகடல் நீர்மட்டங்கள் ஒன்றிணைந்து விடும். சில நாட்கள் கழித்து மீண்டும் நீர்மட்டம் குறைந்து பிரிந்து விடும்.

இதனால் 2017ம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களுக்கு ஏற்றிச் செல்லும் மினி வாகனங்கள் கூட இந்த மூன்று மாதங்களுக்கு அவ்வப்போது செல்லாது. இந்நிலையில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு பின்பு உள்ள அரிச்சல் முனை கடல் பகுதி வரை கடலில் தூண்கள் அமைத்து பாலங்கள் கட்டப்பட்டு தான் சாலைப் போக்குவரத்து துவங்கி இருக்க வேண்டும். இயற்கையின் சீற்றத்தில் நாம் எவ்வளவுதான் செயற்கையை கொண்டு சென்றாலும், அது பேரழிவைத்தான் ஏற்படுத்தும் என அப்பகுதியில் வசித்து வரும் மீனவர்களும், சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

The post பாஜக அரசின் திட்டமிடாத பணியால் தனுஷ்கோடி சாலை திட்டத்தில் ரூ.80 கோடி வீணடிப்பு: கடல் சீற்றத்தில் சிக்கி தவிக்கும் சாலை appeared first on Dinakaran.

Related Stories: