நன்கொடை கொடு, கான்டிராக்டரை வாங்கிக்கோ பாஜவுக்கு நிதி தந்த நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி டெண்டர்: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது,சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திர விவரங்களால் பாஜவுக்கு கெட்ட பெயர் வந்துள்ளது என நினைக்கிறீர்களா என கேட்டதற்கு, எனக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்று கொஞ்சம் சொல்லுங்கள். இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கியுள்ளார். அதனால்தான் உங்களால் அதை பற்றி தேட முடிகிறது என பதிலளித்துள்ளார். இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில்,ஒவ்வொரு நாளும் பாசாங்குத்தனத்தின் உச்சங்களை மோடி தொடுகிறார். நேர்மையின்மையில் மிக பெரிய ஆழத்தை உருவாக்குகிறார்.
இந்த பேட்டியின் மூலம் தேசத்துக்கு மிக பெரிய பொய்யை மோடி சொல்லியுள்ளார்.

தேர்தல் பத்திரம் திட்டம் முற்றிலும் ரகசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், ‘எங்கிருந்து நிதி வந்தது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன’ என்ற விவரங்களை பொதுமக்களிடம் இருந்து மறைக்க மோடி விரும்பினார். கடந்த 2018 மற்றும் 2024 வரை ஆறு ஆண்டுகள், எந்த கட்சிக்கு எந்த நன்கொடையாளரிடம் இருந்து நிதி கிடைத்தது என்ற ஒரு விவரம் கூட மக்களுக்கு தெரியாது. தேர்தல் பத்திர திட்டத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியது. நீதிமன்றத்தில் கடைசி நாள் வரை, மோடி அரசு திட்டத்தில் நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் தெரியாமல் இருக்க அதை பாதுகாக்க முயன்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் பற்றி எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட தரவுகள் மோடி அரசின் மிக பெரிய ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளது. பாஜவுக்கு பல ஆயிரம் கோடி நன்கொடை அளித்த தனியார் நிறுவனங்கள் அதன் மூலம் ரூ.4 லட்சம் கோடிக்கு டெண்டர்கள், திட்டங்களை பெற்றுள்ளன. இதன் மூலம் நன்கொடை கொடு,காண்ட்ராக்டுகளை பெற்று கொள்ளுங்கள் என்ற வியாபார அடிப்படையிலான சூப்பர் மார்க்கெட் போல் அரசு மாறியுள்ளது. மோடி அரசின் ஊழல்கள்,கொஞ்சம், கொஞ்சமாக வெளி வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொய்யை கூறி மக்களிடம் அதை மறைக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

The post நன்கொடை கொடு, கான்டிராக்டரை வாங்கிக்கோ பாஜவுக்கு நிதி தந்த நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி டெண்டர்: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: