விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடல் ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு

* 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

விழுப்புரம் : ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில், ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்கள் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த வழியாக கண்டமானடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும், அரசு மேல்நிலை பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நடந்து வரும் நான்குவழி சாலை பணியில், இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த 23ம் தேதி இரவோடு இரவாக ரயில்வே கேட் மூடப்பட்டது.

மறுநாள் காலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜானகிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பாலத்தின்கீழ் உள்ள நாகப்பட்டினம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வருவாய் துறை மூலம் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரயில்வே துறைஅதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புகொடி ஏற்றி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் 3ம்தேதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். அதில் கண்டமானடி, ஜானகிபுரம், கொளத்தூர், சித்தாத்தூர், வேலியம்பாக்கம், தளவானூர், திருப்பாச்சனூர், பிடகாம், மரகதபுரம், கண்டம்பாக்கம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் சார்பில் வரும் 3ம் தேதி காலை வந்தே பாரத் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. ஊராட்சிக்கு எந்தவித முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக ரயில்வேகேட் மூடப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடல் ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: