தமிழகத்துல பாஜ சின்ன கட்சிதான்: எஸ்.பி.வேலுமணி ‘காட்டம்’

மேட்டுப்பாளையம் சட்டமன்றத்தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தலைமையில் பங்களாமேடு பகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,‘ டெல்லியில் வேண்டுமானால் பாஜ மிகப்பெரிய கட்சியாக இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக சின்ன கட்சி தான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதிமுக தயவால் தான் 4 எம்எல்ஏக்களே அவர்களுக்கு கிடைத்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி.
பாஜக கணக்கிலேயே இல்லை. வெறும் 4 சதவீதம் ஓட்டு வங்கியை வைத்துள்ள பாஜ இரண்டு கோடி தொண்டர்களை வைத்துள்ள அதிமுகவிற்கு எவ்வாறு ஈடாகும்?,’என்றார்.

* தமாகா கொடி இல்லாத வாகனத்தில் ஏறி பிரசாரம் செய்த ஜி.கே.வாசன்: புதுவை தேஜ கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு
புதுச்சேரிக்கு நேற்று வந்த தமாகா தலைவர் ஜிகே வாசன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்துவிட்டு லாஸ்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் நமச்சிவாயம் உடனிருந்த நிலையில், தலைவர்களின் பிரசாரத்துக்காக கட்சி ஏற்பாடு செய்திருந்த பிரசார வாகனத்தில் பாஜ, என்ஆர் காங்கிரஸ், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் நமச்சிவாயத்துக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த ஜிகே வாசனின் தமாகா கட்சியின் கொடி இடம் பெறவில்லை. அந்த இடம் காலியாக இருந்த நிலையில், இதை அங்கிருந்த கட்சிகளின் தொண்டர்கள் நகைச்சுவையாக விமர்சித்தபடி பங்கேற்றனர். இதனால் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மூப்பனார் தமாகாவை தொடங்கி, அரசியலில் உச்சகட்ட செல்வாக்கில் இருந்த காலத்தில் புதுச்சேரி தமாகாவில் நமச்சிவாயம் கட்சி பணியாற்றியதை சுட்டிக் காட்டிய ஆதரவாளர்கள், தற்போது அக்கட்சி புதுச்சேரியில் பெயரளவில் மட்டுமே இருப்பதாக முணுமுணுத்தனர். அப்போது சிலர் பாஜவில், தமாகாவை ஐக்கியமாக்கி விடலாம் என கமெண்ட் அடித்ததையும் காதுகளில் கேட்க முடிந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

* எடப்பாடியை வீழ்த்தவே டிடிவி.யுடன் கூட்டணி: ரவீந்திரநாத் ஆவேசம்
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத்திடம் நேற்று நிருபர்கள், ‘‘ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி யார் மீது சந்தேகமடைந்து குற்றம் சுமத்தினீர்களோ அவர்களுடனேயே கூட்டணி அமைத்துள்ளது ஏன்’’ என்றனர். அதற்கு அவர், இது காலத்தின் கோலம். அரசியலில் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க முடியாது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த கால கட்டத்தில் அப்படி சொல்ல வேண்டியிருந்தது. 50 ஆண்டுகள் அதிமுகவுக்காக பாடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடியால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க வெற்றி பெற வேண்டியுள்ளது. அதனால்தான் எடப்பாடியை தோல்வியடையச் செய்ய டிடிவி.தினகரனுடன் சேர்ந்துள்ளோம்’’ என்றார்.

The post தமிழகத்துல பாஜ சின்ன கட்சிதான்: எஸ்.பி.வேலுமணி ‘காட்டம்’ appeared first on Dinakaran.

Related Stories: