விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன், பசிலியான் உட்பட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்புமனுக்கள் ஏற்பு 3 சுயேட்சைகள் உட்பட 11 மனுக்கள் தள்ளுபடி

நாகர்கோவில், மார்ச் 29: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் 33 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையில் 3 சுயேட்சைகள் உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 22 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. நேற்று வரை மொத்தம் 25 வேட்பாளர்கள் 33 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் தர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பரிசீலனையில் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் உட்பட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை வேட்பாளர் தியோடர் சாம், தமிழ் மாநில கம்யூனிஸ்ட் பார்ட்டி வேட்பாளர் முகம்மது அலி, சுயேட்சை வேட்பாளர் சண்முகம் ஆகிய 3 வேட்பாளர்களின் மனுக்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் மாற்றுவேட்பாளர்கள் மனுக்கள், வேட்பாளர்களின் கூடுதல் மனுக்கள் என்று 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (30ம் தேதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன், பசிலியான் உட்பட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்புமனுக்கள் ஏற்பு 3 சுயேட்சைகள் உட்பட 11 மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: