விவசாயியை கடத்தி தாக்கிய அதிமுக, பாமக நிர்வாகிகள்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பெருமாள் தெருவை சேர்ந்தவர் பாலமுரளி வீரண்ணகுப்தா (54). இவருக்கு பேளூர் ரோடு மற்றும் வாழப்பாடி அண்ணா நகர் பகுதியில் நிலம் உள்ளது. இதில், பேளூர் ரோட்டில் உள்ள நிலத்தில் 2 கடைகளை வாழப்பாடி பெருமாள் தெருவை சேர்ந்த அதிமுக 8வது வார்டு கிளைச்செயலாளர் சேகர் என்பவர் வாடகைக்கு நடத்தி வந்துள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக அந்த கடைகளுக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. சேகரிடம் பாலமுரளி வீரண்ணகுப்தா வாடகையை கேட்டும் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் தனது நிலங்களை ரூ.40 லட்சத்திற்கு பாலமுரளி வீரண்ணகுப்தா விற்றுள்ளார். இதனை அறிந்த சேகர் தரப்பினர் அவர் மீது ஆத்திரம் கொண்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் பாலமுரளி வீரண்ணகுப்தா நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வாழப்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் நின்றுள்ளார். அங்கு காரில் வந்த மர்மநபர்கள், திடீரென அவரை உள்ளே இழுத்து போட்டு காரில் கடத்திச்சென்றனர். பிறகு இரவில் வாழப்பாடி சந்தை ரேஷன் கடை பகுதியில் இறக்கிவிட்டு விட்டு அக்கும்பல் தப்பிச்சென்றது. அப்போது பாலமுரளி வீரண்ணகுப்தாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது.

இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், அதிமுக கிளைச்செயலாளர் சேகர், வாழப்பாடி 10வது வார்டு அதிமுக கிளைச்செயலாளர் குமரன், பாமக வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார், சங்கர் ஆகியோர் அவரை காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி வெற்று புரோநோட்டில் கையெழுத்து பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் மீதும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று, அதிமுக கிளைச்செயலாளர்கள் சேகர் (65), குமரன் (52), பாமக மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் (48) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சங்கரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post விவசாயியை கடத்தி தாக்கிய அதிமுக, பாமக நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Related Stories: