பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு: மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் வழக்கு.!தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் தோல்விகுறித்து நேற்று காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சியின் புதிய சகாப்தம் வரும் ஜூனில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தொடங்கும். அப்போது பெண்களுக்கான 10 ஆண்டுகால அநீதி காலத்தை முடிவுக்குக் கொண்டு வரும். ஒன்றிய பாஜ அரசின் ‘பெண் சக்தி’ முழக்கங்கள் உண்மையான நடவடிக்கையாக இல்லாமல் வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பெண்கள் தாக்கப்படும்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி அமைதியாக இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களுக்காக மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறார். அவரது அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திசை திருப்பப்படுகிறது. இவை மட்டுமல்ல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2014 முதல் 2022 வரை என்சிஆர்பி தகவல் அடிப்படையில் பார்த்தாலே பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2012ல் 2.4லட்சம் வழக்குகள் பதிவான நிலையில் 2022ல் 4.5 லட்சமாக உயர்ந்து விட்டது. 2017ல் போக்சோ வழக்குகள் 32,600 பதிவாகி இருந்தன. ஆனால் 2022ல் 64,400 வழக்குகள் பதிவாகி உள்ளன.

5 ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.இதுதவிர 2013ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளை செயல்படுத்த நிர்பயா நிதியை அமைத்தது. ஆனால் மோடி ஆட்சி அமைந்தபிறகு மகளிர் அமைச்சகம் அந்த நிதியைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 2022 வரை வெறும் 33 சதவீதம் நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இவை மட்டுமல்ல பா.ஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி போராட்டம் நடத்திய பெண் மல்யுத்த வீரர்களை பாஜ மிருகத்தனமாக அடக்கியது. குஜராத் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகளை அவர்கள் விடுவித்தனர். கதுவா முதல் ஹத்ராஸ் வரை, பாஜ இந்தியாவை பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது. மணிப்பூரில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பலாத்கார மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் தகவல்கள் வெளிவரும் அதே வேளையில், பிரதர் மோடியும், மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் முற்றிலும் செயலற்றவர்களாகவே உள்ளனர்.

இந்தப் பிரச்சனைகளில் பேசக்கூட முடியவில்லை என்றால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி என்னதான் செய்கிறார்? மேலும் பாஜ அதிகளவில் ஆண் ஆதிக்கத்தை புகுத்தி உழைக்கும் பெண்களுக்கு விரோதமான சூழலை உருவாக்கியுள்ளது. 2022-23ம் ஆண்டில், பெண் தொழிலாளர் விகிதம் வெறும் 8.8% ஆக இருந்தது. இது 90% க்கும் அதிகமான உழைக்கும் வயதுடைய பெண்கள் வேலையைத் தேடவில்லை என்பதைக் குறிக்கிறது. இது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் மிகக் குறைவு. ஸ்மிருதி இரானியின் திறமையின்மை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் பொறுப்பேற்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு பெண்களுக்கு எதிரான 10 ஆண்டுகால அநியாய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு, செழிப்பு, வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தைத் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு: மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் வழக்கு.!தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: