குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி: சென்னை, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகளும், தமிழக அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் சென்று வருகின்றன.
இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக தனியார் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சாப்பிடுகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை சேகரிக்கும் ஓட்டல் நிர்வாகத்தினர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டியபடி தினந்தோறும் குப்பை, கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஜிஎஸ்டி சாலையோரத்தில் உள்ள தனியார் ஓட்டல்களில் விற்கப்படும் உணவுகளின் விலையை விட இரண்டு மடங்கு கூடுதலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் விற்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை.

உணவு பொருட்களுக்காக அடாவடியாக வசூல் செய்து வரும் தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர், பேருந்து பயணிகள் சாப்பிட்டு போட்டுவிட்டு செல்லும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பை, கழிவுகளை எடுத்து சென்று பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் நீரேற்றும் நிலையத்தை ஒட்டியபடி வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் குப்பை, கழிவுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் அப்பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வது கிடையாது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: