பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா; மாட்டு வண்டியில் வந்து குவியும் பக்தர்கள்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

இன்று இரவு எட்டு மணிக்கு கோயில் முன்பு குண்டத்தில் ஏற்றி கரும்புகள் அடக்கப்பட்டு குண்டத்திற்கு தீ வார்க்கப்படும். செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் தெப்பக்குளத்திற்கு சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், 3 மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தின் முன்பு வரம் பெறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை அதிகாலை 3.45 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் தற்போதே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இடம் பிடித்து காத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், ஈரோடு எஸ்பி., ஜவகர் இன்று கோயில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சுமார் 1400 போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கி வழிபடுவதற்காக கோபிசெட்டிபாளையம், அந்தியூர், ஈரோடு, கோவை, சூலூர், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் பூட்டிய வண்டிகள் மற்றும் பாதயாத்திரையாக பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். கோயில் வளாகத்தில் மாட்டு வண்டிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் வண்டிகள் நிறுத்தப்பட்டு மாடுகளுடன் விவசாயிகள் கோயில் வளாகத்தில் தங்கியுள்ளனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் களை கட்டியுள்ளது.

The post பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா; மாட்டு வண்டியில் வந்து குவியும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: