ஜம்மு காஷ்மீரை அழிக்கிறது பாஜ: காங். வேட்பாளர் குற்றச்சாட்டு

கதுவா: ‘காஷ்மீரை பாஜ அழித்துக் கொண்டிருக்கிறது. வெளிமாநில தொழில்நிறுவனங்களுக்கு 100 சதவீத மானியம் தந்து உள்ளூர் மக்களை வஞ்சிக்கிறது’ என உதம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லால் சிங் குற்றம்சாட்டி உள்ளார். காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றியை நோக்கி பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் லால் சிங் மற்றும் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற குலாம் நபி ஆசாத் தொடங்கிய ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சரூரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கதுவா, ஹிராநகரில் காங்கிரஸ் வேட்பாளர் லால் சிங் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பாஜவிடம் பணம், அதிகாரம் இருக்கிறது. ஏற்கனவே அதிகாரத்தையும், அரசு இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்திய வரலாற்றை கொண்டவர்கள் அவர்கள். அதை மீண்டும் செய்வார்கள். நாங்கள் மக்களுடன் தோள் கொடுத்து நின்று அநீதி இழைத்த அவர்களுக்கு எதிராக போராடுகிறோம்.

குலாம் நபி ஆசாத் உதம்பூரில் போட்டியிடாமல் விலகிய போதே அக்கட்சி வெற்றிக்காக போராடவில்லை என்பது தெரிகிறது. ஆசாத்தால் எதிர்ப்பு வாக்குகள் சிதறும். காஷ்மீருக்காக பாஜ எந்த நல்ல காரியத்தையும் செய்யவில்லை. பெரிய மாநிலமான காஷ்மீரை அவர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலை மேம்பாட்டு பணி என்கிற பெயரில் அப்பாவி மக்களின் கடைகளை காலி செய்கிறார்கள்.

பலரின் வேலைவாய்ப்பு பறி போய் உள்ளது. வெளிமாநில தொழில்நிறுவனங்களுக்கு 100 சதவீத மானியம் தந்து உள்ளூர் மக்களை வஞ்சிக்கிறார்கள். இப்போது இருக்கும் அக்னி வீரர்கள் பிரச்னைகளை உருவாக்கி, மக்களிடமிருந்து நிலத்தை பறித்து தொழில்துறையினருக்கு தருகின்றனர்’’ என்றார்.

The post ஜம்மு காஷ்மீரை அழிக்கிறது பாஜ: காங். வேட்பாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: