தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் புதிய தேர்வு குழுவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேர்வு குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையராக அருண் கோயல் இருந்தார். மற்றொரு பதவி காலியாக இருந்தது. கடந்தாண்டு மே மாதம் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா ஓய்வு பெற்றதால் கனரக தொழிற்சாலைத்துறை செயலராக இருந்த அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இவரது பதவி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் திடீரென ராஜினாமா செய்தார். அதனை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்று கொண்டார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா பல்வேறு விவாதங்களை எழுப்பியது. தற்போது காலியாக இருந்த இரு தேர்தல் ஆணையர்களின் பதவியும் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜயா தாகூர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

அதில், ‘இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 ஆணையர்களின் பதவியை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். ஏனெனில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு தொடர்பான சட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படையான சுதந்திரமான குழு அமைக்கப்பட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர், ’தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்காக 200 பேர்களின் பெயர் பரிந்துரையில் இருந்தது. ஆனால் ஒரே நாளில் சில பெயர்களை தேர்ந்தெடுத்து தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என தெரிந்து அவசர அவசரமாக தேர்வுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பெயர்கள் இறுதி செய்யப்பட்டது.

இதற்கு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரே அதிருப்தி தெரிவித்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை முழுமையாக நிர்வாகத்தின் கைகளில் விட்டுவிட கூடாது. அவ்வாறு செய்தால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். குறிப்பாக பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழு தான் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனவே தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் புதிய தேர்வு குழு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போதைய நடைமுறையை தொடராவிட்டால் அது ஜனநாயக நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்’ என்றார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’தற்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது எந்த குறையும் கூறப்படவில்லை. தேர்தல் ஆணையர் தேடல் என்பது பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. தேர்வு நடைமுறை விரைவுபடுத்தியதற்கு காரணம் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் செய்யப்பட்டது’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’தேர்தல் ஆணையர்கள் நியமனம் மற்றும் நீதிபதிகள் நியமனங்களுக்கான நடைமுறை அரசியலமைப்பின் கீழ் மிகவும் வேறுபட்டது. எனவே ஒப்பீடுவது சரியாக இருக்காது. ஆனால் தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது சுதந்திரமாகவும், நியாயமாகவும், இருக்க வேண்டும். இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கான குழுவை ஏற்படுத்தியது. ஏனென்றால் இதுபோன்ற சட்டம் கிடையாது.

தற்போது புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே புதிய தேர்வு குழு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்த மனுக்கள் மீது 6 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

The post தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் புதிய தேர்வு குழுவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: